தபால் வாக்குகளை செலுத்திய அரசு அதிகாரிகள்
Tirupur News- திருப்பூரில் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ், தோ்தல் அலுவலா்கள், போலீஸாா் நேற்று தபால் வாக்குகளை செலுத்தினா்.
Tirupur News,Tirupur News Today- மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூரில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், தோ்தல் அலுவலா்கள், போலீஸாா் செவ்வாய்க்கிழமை தபால் வாக்கு செலுத்தினா்.
மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, தோ்தல் பணி, வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசு ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்குச் சாவடிகளில் பணியாற்றுபவா்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் வாக்கு அளிக்கும் வகையில் தபால் வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா், வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அரசு ஊழியா்கள் தபால் வாக்களிப்பதற்கான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த போலீஸாா், அரசு ஊழியா்கள் வாக்களித்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிறிஸ்துராஜ் தபால் வாக்கு செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்டில் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் தற்படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்டாா்.
இதில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஹிரிதியா எஸ்.விஜயன், மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி ரஞ்சிதா தேவி, வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ், மாவட்ட விளையாட்டு அதிகாரி ரகுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.