திருப்பூர் மாவட்டத்தில், முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருக பெருமான் கோவில்களில், கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 14-ம் தேதி தொடங்கி, நவம்பர் 21-ம் தேதி வரை ஒரு வார காலம் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வருகிற 14-ம் தேதி முதல் காலை மணி 10.30 மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருஉலா காட்சியும் நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 18-ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் காலையில் அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. 21-ம் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் அன்னக்கொடி (பொறுப்பு), கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இதே போல் திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள கொங்கணகிரி முருகன் கோவில், அவிநாசி அருகில், திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில், பெருந்தொழுவை அடுத்துள்ள கண்டியன் கோவில் அலகுமலை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் அதாவது வரும் 13ம் தேதி முதல் சஷ்டி விரதம் துவங்குகிறது.
வரும் 13ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை ஏழு நாட்கள் விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அந்த ஏழு நாட்களும் 3 வேளைகளும் உணவு சாப்பிடாமல் இளநீர், ஜூஸ், பழங்கள் மற்றும் தண்ணீர் மட்டுமே உட்கொண்டு முருக பெருமானை காலை, மாலை இருவேளைகளிலும் வழிபட்டு, கந்தசஷ்டி பாடி தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்ற வேண்டுதல் செய்து விரதம் இருப்பது வழக்கம். வரும் 19ம் தேதியன்று முருகன் - தெய்வானை - வள்ளி திருக்கல்யாணம் பார்த்த பிறகு, தங்களது விரதத்தை நிறைவு செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.