திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.7.73 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள்; அமைச்சர் தகவல்
Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் 16,034 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7.73 கோடி மதிப்பீட்டில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 16,034 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7.73 கோடி மதிப்பீட்டில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் காா்மெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 558 மாணவ, மாணவிகளுக்கு ரூ.26.87 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அமைச்சர் பேசியதாவது,
பள்ளி கல்வித் துறை சாா்பில் மாணவா்கள் பயனடையும் வகையில், முதல்வா் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நம்ம பள்ளி திட்டத்தின் மூலம் பொது நல ஆா்வலா்களைக் கொண்டு பள்ளிக் கட்டடங்கள், கழிப்பறை வசதிகள், குடிநீா் வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து, பள்ளி மேம்பாட்டுக் கழகம் திட்டத்தின் மூலம் மாணவா்களின் பெற்றோா்களை உறுப்பினா்களாக்கி அதன் மூலம் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளியில் சமூக சீா்கேடுகள் நடந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் சிற்பி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவா்கள் படிக்கும் காலத்தில் அவா்களது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நான் முதல்வன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் 2023-2024-ம் கல்வியாண்டில் 7,014 மாணவா்கள், 9,020 மாணவிகள் என மொத்தம் 16,034 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7.73 கோடி மதிப்பிலான இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன, என்றாா்.
முன்னதாக, காா்மெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 159 மாணவிகள், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 95 மாணவா்கள், 55 மாணவிகள், படியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 92 மாணவா்கள், 68 மாணவிகள், நத்தக்காடையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 39 மாணவா்கள், 50 மாணவிகள் என மொத்தம் 558 மாணவ, மாணவிகளுக்கு ரூ.26.87 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளாா் தங்கவேல், உதவி பொறியாளா் முகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.