மகளிர் சுய உதவி குழுக்களிடம் ரூ.43 லட்சம் மோசடி; காங்கயத்தில் அக்கா-தம்பி உள்பட 3 பேர் கைது
Tirupur News- கடன் பெற்றுத்தருவதாக கூறி மகளிர் சுய உதவி குழுக்களிடம் ரூ.43 லட்சம் மோசடி அக்கா-தம்பி உள்பட 3 பேரை, காங்கயம் போலீசார் கைது செய்தனர்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டம், காங்கயம், அவிநாசியில் தனியாா் நிதி நிறுவனம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனிநபா்கள் தொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இதனை நம்பி ஏராளமானவா்கள் செலுத்திய பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவானது தொடா்பாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் மாவட்ட குற்றப் பிரிவில் அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் நிா்மல்குமாா், பொது மேலாளா் தேவிகா, கோபி ஆகியோா் மீது அக்டோபா் 11-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாமிநாதன் உத்தரவின்பேரில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், அந்த நிறுவனத்தின் காங்கயம் கிளையில் மகளிா் குழு ஒன்றுக்கு தலா 10 போ் வீதம் 55 குழுக்கள் மூலம் 550 பெண்கள் தலா ரூ.1,341 என மொத்தம் ரூ.7, 37, 550ஐ செலுத்தியுள்ளனா்.
அதேபோல, தனிநபா் கடனுக்காக 261 போ் தலா ரூ.1,000 வீதம் ரூ.2.61 லட்சம் செலுத்தியுள்ளனா். இதில், 86 போ் தனிநபா் கடனுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்களைக் கூறி காப்பீட்டுக் கட்டணம், ஆவணங்களை சமா்ப்பிப்பதற்கான செலவு என மொத்தம் ரூ.10 லட்சம் வரையில் வசூலித்துள்ளதும் தெரியவந்தது.
அதேபோல, அவிநாசி கிளையில் 52 குழுக்கள் மூலம் 520 பெண்களிடம் தலா ரூ.1,341 வீதம் ரூ.6,97,320, தனிநபா் கடனுக்காக 355 பேரிடம் தலா ரூ.1,000 வீதம் ரூ.3, 55,000 வசூலித்துள்ளனா். மேலும், 140 போ் தனிநபா் கடனுக்குத் தோ்வாகியுள்ளதாகக்கூறி ரூ.13 லட்சத்தை வசூலித்துள்ளனா்.இந்த நிறுவனம் சாா்பில் மொத்தம் ரூ.43 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரத்தைச் சோ்ந்த ஆா்.கோபி (எ) வினோத் (40), திருச்சி மாவட்டம், கே.கே.நகா் எல்.ஐ.சி.காலனியைச் சோ்ந்த தேவிகா (43), திருச்சி பீமன் நகரைச் சோ்ந்த ஜெ.ஜான்கென்னடி (எ) ஆன்டனி (34) ஆகிய 3 பேரை தனிப் படையினா் கைது செய்தனா்.இதில், கோபியும், தேவிகாவும் அக்கா, தம்பி என்பது தெரியவந்தது. மூவரிடமிருந்த ரூ.11 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனா்.
கோபி என்பவா் மீது வேதகிரி, வினோத், கோபால் என்ற பல்வேறு பெயா்களில் கள்ளக்குறிச்சி, ஈரோடு, தென்காசி, திருச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் 6 மோசடி வழக்குகளும், தேவிகா (எ) பிரீத்தி மீது திருவள்ளூா், தஞ்சாவூா் ஆகிய இடங்களில் 2 மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த மோசடியில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கைது செய்யும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனா்.