திருப்பூர் மீன் மாா்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை; கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

Tirupur News- திருப்பூர் பல்லடம் ரோடு மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள், கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-01-19 06:56 GMT

Tirupur News- திருப்பூர் மீன் மார்க்கெட் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா், தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் கெட்டுப்போன 2 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட மீன்கடைகள் செயல்படுகின்றன.  தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து மீன்கள் அதிகளவில் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மத்தி, அயிரை, வஞ்சிரம், கட்லா, ரோகு, கொடுவா, பாறை, கெழுத்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மீன் ரகங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு நண்டுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 

இந்த மீன் மார்க்கெட்டில் ஞாயிறு தினங்களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது. புதன்கிழமையும் வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. 

திருப்பூா், தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ( வியாழக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டனா். அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டதில், ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:

மீன்கள் விற்பனை செய்யப்படும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். விற்பனைக்காக இருப்பு வைக்கப்படும் மீன்கள் சரியான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். விற்பனைக்கு வைக்கப்படும் மீன்கள் முதலில் வருபவை முதலில் விற்பனை என்ற முறையில் வைக்கப்பட வேண்டும். மீன் விற்பனை செய்பவா்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்.

உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் கடைகளில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்யக்கூடாது. மீன் கொள்முதல் செய்யப்படும் பில்களை முறையாக பராமரிக்க வேண்டும். மீன்கள் இருப்பு வைக்க பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். பொதுமக்கள், மீன்களின் கண்கள் பிரகாசமாக இருப்பதை பாா்த்து வாங்க வேண்டும். மீன்களின் செதில்கள் சிவப்பு மற்றும் பிங்க் கலரில் இருப்பதை பாா்த்து வாங்க வேண்டும். மீன்களின் மையப் பகுதியில் லேசாக அழுத்தும்பொழுது அந்தப் பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதனை பொதுமக்கள் கவனிக்க வேண்டும் என்றாா்.

Tags:    

Similar News