திருப்பூரில் சட்டவிரோதமாக நைஜீரியர்கள் தங்கியிருப்பதாக புகார்.. போலீஸார் விசாரணை...
திருப்பூரில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கி இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.;
திருப்பூரில் பல்வேறு இடங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் திருப்பூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதில் நைஜீரியர்கள் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் திருப்பூரில் தங்கி உள்ளதாக தகவல்கள் உள்ளன.
அவர்கள் இங்கு தங்கி இருந்து இரண்டாம் தர பனியன்களை வாங்கி அவர்களது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மேலும், பலர் குடோன்கள், பனியன் நிறுவனங்களையும் திருப்பூரில் நடத்தி வருகின்றனர். எந்த ஆவணங்களும் இல்லாமல் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களையும் அவர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
திருப்பூரில் நீண்ட காலமாக தங்கி இருக்கும் இவர்கள் அவ்வப்போது சட்டவிரோதமான சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால், வெளிநாட்டவர்கள் என்பதால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதில் போலீஸாருக்கும் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது.
இந்த நிலையில், திருப்பூரில் உள்ள நைஜீரியர்களில் ஏராளமானோர் கல்வி மற்றும் சுற்றுலா விசாக்களில் வந்து நீண்டநாள் இங்கு தங்கி இருப்பதாகவும், இவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள், பனியன் குடோன்கள் நடத்தி வருவதாகவும் போலீஸாருக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருக்கும் நைஜீரியர்கள் குறித்து விசாரித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகர கமிஷனர் பிரவீன்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் படி உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் நைஜீரியர்கள் குறித்த விசாரணையில் போலீஸார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
அதன் ஒருபகுதியாக நைஜீரியர்கள் அதகளவில் உலாவரும் காதர்பேட்டை, ராயபுரம் திருப்பூர் காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திருப்பூர் வடக்கு போலீஸார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
போலீஸார் ஆய்வுக்கு வருதை மோப்பம் பிடித்த நைஜீரியர்கள் சிலர் அந்தப் பகுதியில் இருந்து தலைமறைவாகினர். இதனையடுத்து போலீஸார் அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர் இந்த ஆய்வு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அதில் போலியான ஆவணங்கள் மற்றும் ஆவணங்களின்றி தங்கி இருக்கும் வெளிநாட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.