உடுமலை; பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Tirupur News- உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-12-20 03:52 GMT

Tirupur News,Tirupur News Today-பஞ்சலிங்க அருவி (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 83.25 அடி தண்ணீர் நிறைந்துள்ளது. அணைக்கு 10194 கன அடி நீர்வரத்து உள்ளது. முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமராவதி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

தண்ணீர் திறக்கப்படும்பட்சத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. இதனை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அணையின் பிரதான நீர்வரத்தான பாம்பாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து 10 ஆயிரம் கன அடியை கடந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்து தற்போது 86 அடியை எட்டியுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 90 அடியை நெருங்கியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவியதால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முதல் மலைப்பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.

இருப்பினும் அணை அதன் முழுகொள்ளளவை நெருங்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் பதட்டம் நிலவி வருகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. அதேபோல் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. தற்போது பெய்த மழையில் அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால் உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News