தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்; கலெக்டர் ஆலோசனை
Tirupur News- திருப்பூா் மாவட்ட தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குறித்த குழுக் கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
தீபாவளி பண்டிகை காலம் நெருங்கிக்கொண்டு வரும் நிலையில், சில இடங்களில் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளில் தீ விபத்துகள் நடந்துள்ளன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்து பேசியதாவது,
திருப்பூா் மாவட்டத்தில் வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு கடைகள் ஆகியவற்றில் பாதுகாப்பான முறையில் வெடிபொருள்கள் மற்றும் பட்டாசுகள் வைத்து கையாள்வதை உறுதிபடுத்த வேண்டும். பட்டாசு கடைகள் வைக்கப்பட்டால், அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். அதை ஆய்வு செய்யும் அதிகாரிகள் முழுமையாக கண்காணிக்க வேண்டும்.
இதுதொடா்பாக அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான முறையில் வெடிபொருள்களை கையாள்வது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து தொடா்ந்து கண்காணிப்பு பணிகளை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும், என்றாா்.
இகூட்டத்தில், மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன், கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ், இணை இயக்குநா் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) சரவணன், புகழேந்தி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலா் அப்பாஸ், துணை இயக்குநா்கள் ஜெயமுருகன், சுதாகா், வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா்கள் பலா் பங்கேற்றனா்.