பிப். 2ம் தேதி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா
Tirupur News- திருப்பூரை அடுத்துள்ள அவிநாசியில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா நாளை மறுநாள், பிப்ரவரி 2ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள அவிநாசியில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா நாளை மறுநாள் கோலாகலமாக நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் சிறப்பிடம் பெற்ற ஸ்தலம். பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவில், புராணங்களிலும், திருமுறைகளிலும் இடம்பெற்றுள்ளது.
மிகவும் பழமையான, பல சிறப்புகளை பெற்ற இக்கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த சில மாதங்களாக திருப்பணி மும்முரமாக நடந்து வந்தது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து, கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (2ம் தேதி) கோலகலமாக நடக்க உள்ளது.
இதன் காரணமாக, அவிநாசி, சேவூர், கருவலுார், பெருமாநல்லுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து கிராமங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி மாவட்டம் நிர்வாகம் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.
3 டன் பூக்கள்
கும்பாபிேஷக விழாவுக்கு, இன்னும் இரு நாளே உள்ள நிலையில் கோவில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கும் பணி படுஜோராக நடந்து வருகிறது. இதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இருந்து, ஜெப்ரா, ஆர்க்கிட் மலர், கார்னேஷன் பூ, செண்டு மல்லி உள்பட, மூன்று டன் பூக்கள் அவிநாசி கோவிலுக்கு வந்துள்ளது. தற்போது, பூக்கள் கோர்க்கும் பணியில் சிவனடியார்கள், 50 பேர், பெங்களூருவில் இருந்து வந்துள்ள, 20 பேர் உள்பட, 80 பேர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பூக்களை கொண்டு, கோவில் வளாகத்தில் உள்ள, 116 துாண்கள், நடைபாதை, கோவில் சுற்றுசுவர் ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. பூக்களால், 16 அடிக்கு 'சிவோகம்' என்ற எழுத்து வடிவில் அலங்கரிக்க உள்ளனர். தொடர்ந்து, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை கொண்ட தோரணங்களும் தயாராகி வருகிறது. நான்கு ரத வீதிகளில் வாழைக்கன்று கட்டப்போகின்றனர்.
6 இடத்தில் அன்னதானம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அன்றைய தினம் பெரிய அளவில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவிநாசியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபம், கங்கவர், குலாலர், பூவாசாமி, தேவாங்கர் மற்றும் கோ வம்சத்தார் என, ஆறு திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், வாகனப் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யவும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.