அத்திக்கடவு திட்டத்தில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்
Tirupur News- அத்திக்கடவு திட்டத்தில் திடீர் திருப்பமாக விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 24,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
திட்ட செயல்பாட்டை உடனடியாக துவக்க வலியுறுத்தி, இன்று முதல், அவிநாசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பினர் திட்டமிட்டனர்.
இந்நிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில், நேற்று முன்தினம் நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், இது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இதில், அத்திக்கடவு திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி, 99 சதவீதம் முடிவுற்று, 1,045 குளம், குட்டைகளுக்கு நிலத்தடி குழாய் வாயிலாக தண்ணீர் கொண்டு சென்று, வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில், உபரி நீர், 400 கன அடிக்கு மேல் கிடைக்க பெறும் போது, அனைத்து நீரேற்ற பம்புகளையும் இயக்க முடியும். தற்போது, 160 கன அடி நீர் வரத்து மட்டுமே உள்ளதால், நீர் வினியோகிக்க முடியவில்லை. பவானி ஆற்றில், 400 கன அடிக்கு மேல் நீர் கிடைக்கும் போது, இத்திட்டம் துவங்கி வைக்கப்படும்.
ஆண்டுக்கு, 70 நாட்கள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என, விளக்கம் அளித்தார். மேலும், விடுபட்ட குளம், குட்டைகளை திட்டத்தில் இணைப்பது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
இதனால் போராட்டத்தை கைவிட்டு அரசின் நிலைப்பாட்டை விவசாயிகளுக்கு விளக்க இருப்பதாக, போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.