குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் வெடி மருந்து இருப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
Tirupur News,Tirupur News Today- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரிகளிலும் வெடி மருந்து இருப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையத்தில், முறைகேடாக செயல்படும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி, விஜயகுமார் என்ற விவசாயி, கடந்த ஏப்., 22ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். பத்து நாள் போராட்டத்தை அவர், நேற்று கைவிட்டார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விதிமீறல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாயிகள் பங்கேற்று, குவாரிகளின் விதிமீறல்களை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியதாவது: கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு, கல்குவாரிகள் மூலம் மாதம் 100 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்படுவதாகவும்; 50 சதவீத குவாரிகள் மட்டுமே அனுமதி பெற்று இயங்குவதாகவும், ஏற்கனவே கல்குவாரி உரிமையாளர் சங்க மாநில செயலாளர் நாராயண பெருமாள் தெரிவித்திருந்தார்.
மே 1ம் தேதி, அரசு விடுமுறை நாளில் விருதுநகரில் குவாரி இயங்கி, வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம். மடத்துக்குளம் காங்கயம், அவிநாசி, ஊத்துக்குளி பகுதிகளில், 300 கல்குவாரிகள் உள்ளன.
மாவட்ட நிர்வாகம் அனைத்து குவாரிகளிலும், வெடிமருந்து இருப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகரில் நடந்தது போன்ற துயர சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துவிடக்கூடாது. சட்ட விரோத கல் குவாரிக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்றார்.