தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்ய, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.;

Update: 2023-09-27 03:49 GMT

Tirupur News- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் தங்கள் கோரிக்கையை மனுவாக கொடுத்து பேசினார்கள்.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க தலைவர் மதுசூதனன் 

மாவட்டத்தில் 70 ஹெக்டேருக்கு மேல் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. பி.ஏ.பி.திட்ட பாசன பகுதிகளிலும், பாசனம் இல்லாத பகுதிகளிலும் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போய்விட்டதால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காய்ப்பு இழந்துள்ளது. பல தென்னை மரங்கள் அடியோடு கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பி.ஏ.பி.அணைகளிலும் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.முதலாம் மண்டல பாசனத்துக்கு ஒரு சுற்று தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள தென்னை மரங்கள் மட்டும் சில நாட்களுக்கு உயிரோடு இருக்க பயன்படும்.

உடுமலை, தாராபுரம், மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் லாரி தண்ணீர் வாங்கி பாய்ச்சுவதால் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. வடகிழக்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்யாவிட்டால் தென்னை மரங்கள் கருகிவிடும். நீண்டகால பயிரான தென்னைக்கு உரிய இழப்பீடு கிடைக்க பயிர் காப்பீட்டு திட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் இணைத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில் தென்னை காப்புறுதி திட்டம் என்ற பெயரில் பிரிமியம் 50 சதவீதம் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும், 25 சதவீதம் விவசாயிகளும் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வந்தனர். அந்த திட்டத்தை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து துறைகளின் சார்பில் தென்னை பயிர் காப்பீட்டில் பதிவு செய்ய துரித ஏற்பாடு செய்ய வேண்டும். காப்பீட்டுத்தொகையாக மரத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் குமார்

மாவட்டத்தில் பேரூராட்சிகளை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறி, கீரை வகைகளை உழவர் சந்தைகள் உள்ள திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு எடுத்து செல்ல வேண்டும். குறைந்த அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகள் காய்கறிகளை இங்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. மாவட்டத்தில் 16 பேரூராட்சிகள் உள்ளன. அங்கு மக்கள் தொகை அதிகம். அதனால் பேரூராட்சிகளில் 10 முதல் 20 சிறுகடைகளை கொண்ட தினசரி அங்காடிகளை தொடங்க வேண்டும்.

தக்காளி, சின்ன வெங்காயம் மாவட்டத்தில் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. தற்போது உற்பத்தி செலவுக்கு ஏற்ப கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் அதிக நஷ்டம் அடைகின்றனர். சில நேரங்களில் அதிக விலைக்கும், பல நேரங்களில் நஷ்டத்தையும் சந்திக்கிறார்கள். தக்காளி, சின்னவெங்காயம் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து, கட்டுப்பாடியான விலை விவசாயிகளுக்கு கொடுத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினா்.

Tags:    

Similar News