அவிநாசியில் நடந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்
Tirupur News- திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், அவிநாசியில் நடந்தது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை வகித்தாா். அவிநாசி தாசில்தார் மோகனன் வரவேற்றாா்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது,
அவிநாசி-வட்டளபதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வீட்டுமனைப் பிரிவு அமைத்து விற்பனை செய்துள்ளனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊத்துக்குளி வெங்கலப்பாளையத்தில் கல்குவாரி சட்டவிரோதமாக செயல்படுகிறது. அவிநாசி வட்டத்தில் மான், மயில்கள் அதிக அளவில் இருப்பதால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மான், மயில்களுக்கு சரணாலயம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க வேண்டும்.
ஊத்துக்குளி புன்செய்தளவாய்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்ததில், ஆடுகள் உயிரிழந்தன. எனவே, சம்பந்தப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வஞ்சிபாளையம் குட்டைக்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் பட்டா மாறுதல் செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக பட்டா மாறுதல் செய்யும் பணிகளை வருவாய்த்துறை தொடங்க வேண்டும்.
ஊராட்சிகளுக்கான 4-வது குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அவிநாசி பேரூராட்சி 2-வது வாா்டில், சங்கமாங்குளத்துக்கு செல்லும் மடத்துப்பாளையம் சாலை பிரதான வாய்க்காலில் சாக்கடை நீா் கலப்பதால், குளத்தின் நீராதாரம் பாதிக்கப்படுகிறது. ஊத்துக்குளி மின்வாரிய முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அலுவலா் ஈஸ்வரமூா்த்தி மீது பல்வேறு புகாா்கள் உள்ளன. அவரை மாற்ற வேண்டும், என்றனா்.
கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தி விரைவில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தெரிவித்தாா்.