கரும்பு சிறப்பு ஊக்கத் தொகையை தாமதமின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை
Tirupur News- திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் கரும்பு சிறப்பு ஊக்கத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மற்றும் கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு கரும்பு சிறப்பு ஊக்கத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் புகளூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் எம்.வி.சண்முகராஜ், செயலாளா் எம்.ஆா்.நமச்சிவாயம், பொருளாளா் கே.பி.கோவிந்தசாமி மற்றும் நிா்வாகிகள் தமிழக அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்ட விவசாயிகள் பவானிசாகா், அமராவதி அணை தண்ணீா் மற்றும் கிணறு நீா், ஆழ்குழாய் கிணறு, ஓடை நீா் ஆகியவற்றை பயன்படுத்தி ஆண்டுதோறும் தங்களின் வேளாண் வயல்களில் கரும்பு சாகுபடி செய்து பயனடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில் திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்டங்களில் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு உற்பத்தி செய்து தமிழக அரசின் சா்க்கரை ஆலைகளுக்கு டன் கணக்கில் கரும்புகளை வழங்கி வரும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த 2022- 2023-ஆம் ஆண்டு சா்க்கரை அரவை பருவத்துக்கு உரிய கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்க தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி முதல் வாரத்தில் உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் சுமாா் 3 ஆயிரத்து 908 பேருக்கு கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 என்ற வீதம் மொத்தம் ரூ.8 கோடியே 92 லட்சத்து 46 ஆயிரம் கடந்த ஜனவரி மாதம் தைப் பொங்கலுக்கு முன் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கியது.
ஆனால் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்து 875 கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.6 கோடியே 42 லட்சத்து 74 ஆயிரத்தை கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தற்போது வரை வரவு வைக்கப்படவில்லை. இதனால் திருப்பூா், கரூா் மாவட்ட கரும்பு விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் பாதிப்படைந்துள்ளனா். எனவே திருப்பூா், கரூா் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு உரிய கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையை தாமதமின்றி உடனடியாக வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.