பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடப்பதாக, விவசாயிகள் சங்கம் புகார்
Tirupur News-பி.ஏ.பி., விவசாயிகள் நலச்சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில், பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடப்பதாக, புகார் எழுந்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- பி.ஏ.பி., விவசாயிகள் நலச்சங்கம், உப்பாறு அணை விவசாயிகள் சங்கம் மற்றும் பூசரநாயக்கன்பாளையம் ஏரி விவசாயிகள் சங்கத்தினர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
பி.ஏ.பி., தண்ணீரை ஒரு குறிப்பிட்ட கிணறு வாயிலாக, 35 நாட்களாக தினமும் 22 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் திருடப்பட்டு 100 டேங்கர் லாரி அளவுக்கு விற்கப்பட்டுள்ளது. ஆதாரபூர்வ புகாரை பி.ஏ.பி., விவசாயிகள் சங்கத்தினர் உடுமலை டி.எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நீர் திருட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டது.குறிப்பிட்ட நீர் திருட்டு வாயிலாக மட்டும், பி.ஏ.பி., தண்ணீர் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்று பல்வேறு இடங்களில் நீர் திருட்டு நடந்து வருவதால், 2 சுற்றுகள் வினியோகம் செய்யப்பட வேண்டிய தண்ணீர் ஒரே சுற்று அளவுக்கு நான்காம் மண்டல ஆயக்கட்டுதாரர்களுக்கு அரை, குறையாக வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க செயலாளர் வேலுசாமி கூறுகையில், பி.ஏ.பி., கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர் பல இடங்களில் திருடப்படுகிறது என தொடர்ந்து கூறி வருகிறோம். இதனால் 2 சுற்றுகளுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டிய, 2,500 மில்லியன் கன அடி தண்ணீரை ஒரே சுற்றில் முடித்து விட்டனர். நீர் திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயத்துக்கு பயன்பட வேண்டிய பிஏபி தண்ணீரை, இப்படி சுயநலத்துக்காக, தனிநபர்கள் கணிசமான லாபமடையும் வகையில் தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்க, அதிகாரிகள் தரப்பில் உடனடியாக நடவடிக்கை முன்வர வேண்டும் என்பதே, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.