பராமரிப்புச் செலவை ஏற்றுக்கொள்ள முடியுமா?- அதிகாரி கேள்வியால் விவசாயிகள் அதிர்ச்சி
Tirupur News-வட்டமலை அணைக்கு அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீா் கொண்டு வரும் திட்டத்துக்கான பராமரிப்புச் செலவை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள முடியுமா என நீா்வளத் துறை அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவிலை அடுத்த வட்டமலை அணைக்கு அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீா் கொண்டு வரும் திட்டத்துக்கான பராமரிப்புச் செலவை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள முடியுமா என நீா்வளத் துறை அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த உத்தமபாளையத்தில் வட்டமலை அணை கடந்த 1980-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன்மூலம் 6,040 ஏக்கா் நிலம் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால், போதிய நீராதாரம் இல்லாததால் கடந்த 43 ஆண்டுகளில் இரண்டுமுறை மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அணை கட்டியும் பயனில்லாமல் உள்ளது. பிஏபி திட்டத்தின் மூலம் அணைக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டம் இருந்தும் பல்வேறு காரணங்களால் அது முடங்கிக்கிடக்கிறது. மேலும், 5 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அமராவதி ஆற்றிலிருந்து கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீா் கொண்டுவருவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. அமைச்சா் மு.பெ.சாமிநாதனின் முயற்சியால் அமராவதி திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டு, நீா்வளத் துறையால் அடுத்தக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஈரோடு திட்டம் மற்றும் வடிவமைப்பு உப கோட்ட நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அருள்மணி, வட்டமலை அணை பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் பழனிசாமிக்கு அண்மையில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளாா்.
அதில், அமராவதி ஆற்றிலிருந்து உபரி நீரை குழாய்கள் மூலம் வட்டமலை அணைக்குக் கொண்டுவரும் திட்டத்தின் விரிவான ஆய்வறிக்கை அரசின் ஒப்புதல்பெற தயாா் நிலையில் உள்ளது. இத்திட்டம் செயலாக்கத்துக்கு வரும்பட்சத்தில் மின் கட்டணம், இயக்கம், பராமரிப்புக்காக ரூ.3.03 கோடி வரை செலவாகும்.
இந்தச் செலவை அணையின் ஆயக்கட்டு விவசாயிகளே ஏற்பது தொடா்பான ஒத்திசைவை வழங்க வேண்டும். இதனை ஏற்கும்பட்சத்தில், திட்ட ஒப்புதலை விரைந்துபெற நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளால் இயலுமா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீா்வளத் துறை அதிகாரியின் இந்தக் கடிதத்தால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
இது குறித்து வட்டமலை அணை பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பழனிசாமி கூறியதாவது:
பிஏபி பாசன விரிவாக்கத் திட்டத்தில்தான் வட்டமலை அணை கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இந்த அணை உடுமலை நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஓரளவுக்கு நீா் கிடைத்து வந்தது. அடுத்தடுத்து பவானிசாகா், அமராவதிக்கு கோட்டத்துக்கு மாற்றப்பட்டதால் கடந்த 35 ஆண்டுகளாக தண்ணீா் இல்லாமல் அணை வடுகிடக்கிறது.
எனவே, உடுமலை நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் மீண்டும் தண்ணீா் கிடைக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக வறட்சியில் சிக்கித்தவிக்கும் அணையின் ஆயக்கட்டு விவசாயிகளிடம் அமராவதி திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.03 கோடி கட்டச் சொல்வதில் எவ்வித நியாயமும் இல்லை. இதனை அரசு செலவிலே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.