சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க அழைப்பு
Tirupur News- விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- தமிழக அரசால் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி சர்வதேச போட்டிகளில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன் ஷிப் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட காமன்வெல்த் சாம்பியன் ஷிப் போட்டிகள், ஆசிய சாம்பியன் ஷிப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வசே விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக விளையாட்டு மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இதில் தேசிய அளவிலான போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிகளான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன் ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட போட்டிகளில் 1-1-2018 அன்றோ அல்லது அதற்கு பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானதாக கருதப்படும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருகிற 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதள முகவரி அல்லது சென்னை நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.