திருப்பூர் மாவட்டத்தில், மழைக்கால மின் விபத்துகளை தவிர்க்க மின்வாரியம் எச்சரிக்கை
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், மழைக்காலமாக இருப்பதால், மின்விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகரம், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உடுமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ரோடுகள் மற்றும் நடந்து செல்லும் தெருக்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் தென்பட்டால், பொதுமக்கள் அருகில் செல்லக்கூடாது. மின் கம்பி தண்ணீரில் கிடந்தால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். மேலும் இதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின் சாதனங்கள் மழை நீரில் மூழ்கினால், உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். ஈரக்கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது. மின்னல் மற்றும் இடியின் போது டி.வி., கம்ப்யூட்டர், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
இடி, மின்னலின் போது மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோகக்கம்பி வேலிகள், திறந்த நிலையிலுள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்ககூடாது. சார்ட் சர்க்யூட் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.
மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை இயக்கும் போது உலர்ந்த, ரப்பர் பாய்களின் மீது நிற்க வேண்டும். துணிகளை உலர வைக்க மின் இழுவை கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை தாங்கிகளாக பயன்படுத்த கூடாது. மேலும் மின் விபத்துக்கள் குறித்து 'மின்னகம்' 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் முக்கியமாக, மொபைல் போன்களை பிளக்கில் சார்ஜ் குத்தியபடி, சார்ஜ் ஏறும் சமயங்களில் போனில் பேசுவதோ, பயன்படுத்துவதோ கூடாது. அதே போல், மழை நேரங்களில் போன்களை பயன்படுத்துவது மிக முக்கியம். டிவி பார்ப்பதை தவிர்ப்பதும் முக்கியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.