திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள்; மாநில தேர்தல் ஆணையர் கலந்தாய்வு
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், தேர்தல் பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கலந்தாய்வு நடத்தினார்.;
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில், தேர்தல் பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள், அந்த அமைப்புகளில் தற்போதைய நிலவரப்படி காலியாக உள்ள பணியிட விபரம், மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் இருப்பில் உள்ள விபரம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் இருப்பு, தேர்தல் பொருட்கள் இருப்பு விபரம், தேர்தல் வழக்குகள் குறித்த விவரம் ஆகியன குறித்து, இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் போலீஸ் பாதுகாப்பு விவரம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த கால தேர்தல்களின் போது பிரச்னைக்குரிய பகுதிகளாக கண்டறியப்பட்ட ‘சென்சிடிவ்’ இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வரும் தேர்தல் காலகட்டத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், காலிப்பணியிடங்களை பொறுத்த வரையில் ஊரக உள்ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி 19 எண்ணிக்கை காலியிடம் ஏற்பட்டுள்ளது எனவும், ஊராட்சித் துணைத்தலைவர்பதவி 3 எண்ணிக்கை காலியிடம் ஏற்பட்டுள்ளது எனவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி 2 எண்ணிக்கையும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி 1 எண்ணிக்கை காலியிடம் ஏற்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த காலியிடங்கள் இறப்பு மற்றும் ராஜினாமா ஆகிய காரணங்களினால் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது நடந்து முடிந்த மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் தொடர்பாகவும், கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.