உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா பயணியர்
Tirupur News- மேற்குத்தொடர்ச்சி மலையில் நிலவும் வறட்சியால், சிற்றாறுகளில் நீர் வரத்து இல்லாமல், பஞ்சலிங்க அருவியும் இந்தாண்டு வறண்டு போய் காணப்படுகிறது.
Tirupur News,Tirupur News Today- மேற்குத்தொடர்ச்சி மலையில் நிலவும் வறட்சியால், சிற்றாறுகளில், நீர் வரத்து இல்லாமல், பஞ்சலிங்க அருவியும் இந்தாண்டு வறண்டு விட்டது. இதனால், சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் இருந்து, 960 மீ., உயரத்தில், வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியில், ஆண்டு முழுவதும் சீரான நீரோட்டம் இருக்கும்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும், தோனியாறு, கொட்டையாறு உள்ளிட்ட சிற்றாறுகள், பஞ்சலிங்கம் கோவில் அருகே, ஒருங்கிணைந்து, பஞ்சலிங்க அருவியாய் மாற்றம் பெறுகிறது.
வழக்கமாக கோடை காலத்திலும், பஞ்சலிங்க அருவியில், சீராக தண்ணீர் கொட்டும் என்பதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியர், அருவிக்கு வந்து செல்வார்கள். அதுவும் கோடை காலத்தில் இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புவர். நண்பர்களுடன் குடும்பத்துடன் வந்து கொண்டாட்டமாக குளித்து விட்டுச் செல்வது வழக்கம். அதனால் இந்த அருவில் எப்போதுமே திருவிழா போல மக்கள் கூட்டம் காணப்படும்.
கடந்தாண்டு இறுதியில், வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யாத நிலையில், கோடை மழையும், இதுவரை மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யவில்லை. எனவே, நீர் வரத்து அளிக்கும் சிற்றாறுகளும், அருவியும், இந்தாண்டு வறண்டு விட்டன.
கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்வத்துடன் பஞ்சலிங்க அருவிக்கு வரும் சுற்றுலா பயணியர், அருவியில், தண்ணீர் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
மலைத்தொடரில், கோடை மழை துவங்கினால், பஞ்சலிங்க அருவி மீண்டும் ஆர்ப்பரிக்கும்; எனவே மழையை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.