மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்; விளையாட்டு வீரர்கள் ஆர்வம்
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில், 1500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆர்வமாக பங்கேற்று, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் 1,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 5-வது மாவட்ட அளவிலான (14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்டோர்) இருபாலருக்கான தடகள 'சாம்பியன்ஷிப்' போட்டிகள், திருப்பூரை அடுத்த அணைபுதூரில் உள்ள டீ பப்ளிக் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தடகளப் போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தெற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் வனிதா, திருப்பூர் தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் மோகன்கார்த்திக், செயலாளர் முத்துக்குமார், பூபேந்திர் மதான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து 100 மீ., 200மீ., 400 மீ. தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றன. இதில் மொத்தம் 1,543 வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள், செப்டம்பர் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 37-வது தமிழ்நாடு மாநில இன்டர் டிஸ்டிரிக்ட் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கலந்துகொள்ள உள்ளனர். மாநில தடகளத்தில் வெற்றி பெறுபவர்கள், கோவை மாவட்டத்தில் நவம்பர் 4-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை நடைபெறவுள்ள 38-வது தேசிய அளவிலான தடகளப்போட்டிகளில் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்க தகுதி பெறுவார்கள், என்று கூறினா்.