திருப்பூர் அரசு பள்ளிகளில் நாளை முதல் பாடநூல் விநியோகம்
திருப்பூரில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் பாடநூல் விநியோகம் செய்யப்படுகிறது.;
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், பல்லடம், உடுமலை மாவட்ட கல்வி அலுவலர்கள் சார்பில், அனைத்து வகை அரசு, அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், அனைத்து வகை வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை நாளை 28 ம் தேதி முதல் நடத்தப்பட வேண்டும்.
அதேபோல், நாளை முதல் பள்ளியில் படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடநூல்கள் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் சேர்க்கை சார்ந்த விவரங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் படிவத்தில் தினசரி பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு பாட நூல்கள் வழங்கும்போது கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் வகுப்புகளுக்கான கால அட்டவணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மேற்கண்ட கல்வி மாவட்டங்களில் , அரசு பள்ளிகளில் நாளைமுதல் பாட நூல்கள் வழங்கப்பட உள்ளன.