எலி மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை:அதிகாரிகள் எச்சரிக்கை

Tirupur News,Tirupur News Today- எலி மருந்து விற்பனை செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Update: 2023-07-07 09:46 GMT

Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு, 60 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில் கடந்த ஆண்டு 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறைந்த வட்டி கடன் திட்டங்கள், மானியத் திட்டங்கள் போன்றவற்றையும் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மிக எளிதாக மளிகைக் கடை, பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கும் எலி மருந்தைப் பயன்படுத்தி பல தற்கொலைகள் நிகழ்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடோல்) பூச்சி மருந்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதேநேரத்தில் தடையை மீறி இந்த எலி மருந்தை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, எலிகளைக் கட்டுப்படுத்த தோட்டம் மற்றும் வீடுகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது.மஞ்சள் பாஸ்பரஸ்க்கு எதிர்வினை மருந்து இல்லாததால் சில நேரங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் மருந்தை பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் விற்பனை செய்யக் கூடாது.மீறி விற்பனை செய்யும் பூச்சிக்கொல்லி மருந்து வினியோகஸ்தர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

குடிமங்கலம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்து விற்பனை செய்தால் குடிமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலரை 9788425208 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News