உருண்டு, பிரண்டு வாடகை கேட்ட 'டாக்ஸி' ஓட்டுனர்கள்
தாராபுரத்தில், தேர்தல் பணிக்காக வாடகை கார் ஓட்டியவர்கள், வாடகை பணம் கேட்டு உருண்டு, பிரண்டு, தங்களின் குமுறலை வெளிப்படுத்தினர்.
கடந்த, ஏழு மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தல் பணிக்கு, அந்தந்த தாலுகா வாரியாக, அதிகாரிகள் பயன்பாட்டுக்கு வாடகை கார்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான, வாடகை தொகையை அதிகாரிகள் வழங்க வேண்டும். ஆனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேர்தல் பணிக்கு, கார் ஓட்டியவர்களுக்கு இதுவரை வாடகை தொகை தரவில்லை எனக்கூறப்படுகிறது.
வாடகை தொகை கேட்டு, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அதிகாரிகளின் வாகனம் முன் உருண்டு, பிரண்டு வாடகையை தொகையை வழங்குமாறு, கார் ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில் தேர்தல் முடிந்து, 4 மாதங்களுக்குள் வாடகை தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், ஏழு மாதமாகியும் வழங்கவில்லை. தாராபுரத்தில், 10க்கும் மேற்பட்ட கார்களுக்கு, 60,000 முதல், 80,000 ரூபாய் வரை வாடகை தொகை நிலுவையில் உள்ளது. இந்த தொகையை, உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.
அவர்களை அழைத்து, வட்டாட்சியர் சைலஜா பேச்சு வார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு, இப்பிரச்னையை கொண்டு சென்று, விரைவில் வாடகை தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து, கார் ஓட்டுனர்கள் கலைந்து சென்றனர்.