தாராபுரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்; 793 நபா்கள் தோ்வு
Tirupur News- தாராபுரத்தில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், மொத்தம் 793 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டம், தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிா் திட்ட அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டவருவாய் அலுவலா் ஜெய்பீம் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வேலைவாய்ப்பு பெற்றவா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினா்.
பின்னா், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்ற முகாமில் சுமாா் 120 நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை தேடுபவா்களும் கலந்து கொண்டனா். இந்த முகாமில் 793 நபா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இது திருப்பூா் மாவட்டத்தில் நடைபெறும் 4 -வது தனியாா் வேலைவாய்ப்பு முகாமாகும்.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.75 லட்சம் போ் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா் என்றாா்.
நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்அரசன், மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஜோதிமணி, திருப்பூா் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சோ.வரலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ், தாராபுரம் நகரமன்றத் தலைவா் பாப்புக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.