'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
‘சிறுவர்கள் செய்யும் தவறுக்கு, பெற்றோரிடம் இருந்து, அபராதம் வசூலிக்கப்படும்’ என, சட்ட உதவி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழாவை முன்னிட்டு தாராபுரம் தேசிய சட்டப்பணிகள் குழு, தாராபுரம் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து, தாராபுரம் விவேகம் பள்ளியில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தின. பள்ளி தாளாளர் ஆர்.சுப்ரமணியம், வரவேற்று பேசினார்.
விழாவிற்கு, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி குமார், தலைமை வகித்தார். குற்றவியல் நீதின்ற நடுவர் பாபு பேசுகையில்,''18 வயதுக்கு உட்பட்டோர், கட்டாயம் வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பெற்றோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, 5,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டினால், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் பேசுகையில்,''தாராபுரத்தில், இந்தாண்டு, சாலை விபத்தில், 50 பேர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள், படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள்,'' என்றார். பின், சாலை விதிகள் குறித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவ, மாணவியருக்கு நீதிபதி குமார் சரவணன் பரிசுகளை வழங்கினார்.
சார்பு நீதிபதி தர்மபிரபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏக்னஸ் ஜெபகிருபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராசு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.