ஊராட்சி மன்ற தலைவர் ‘ஆப்சென்ட்’- கிராம சபைக்கூட்டம் ரத்து
Tirupur News,Tirupur News Today- தாராபுரம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் வராததால், கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றம் சார்பில் கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நேற்று காலை 11 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கூட்டம் நடக்கும் இடத்திற்கு காலை 11 மணி முதல் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து காத்திருந்தனர்.
ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் செல்விரமேஷ் வரவில்லை. இதனையடுத்து மற்றும் ஊராட்சி செயலர் பெரியசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆதரவுடன் கிராம சபை கூட்டத்தை நடத்த முன் வந்தனர். ஆனால் ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித்தலைவர் இல்லாமல் கூட்டத்தை நடத்துவதா என, பொதுமக்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.
அப்போது ஊராட்சி செயலாளர் பெரியசாமி, ‘தலைவருக்கு உடல்நிலை சரியில்லை’ எனக் கூறியதாக தெரிகிறது. பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை கேட்பதாக கூறி, கடந்த மே 1-ம் தேதி நடந்த கூட்டத்திலும் ஊராட்சித் தலைவர் பங்கேற்கவில்லை,
அதேபோன்று இந்த கூட்டத்தையும் புறக்கணித்ததாக கூறி, அதிகாரிகளிடம் பொதுமக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து, பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டனர். சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடத்த 200 பேர் தேவை. ஆனால், சுமார் 100 பேர் மட்டுமே பொதுமக்கள் வந்திருந்தனர்.
அத்தியாவசியபணிகளை செய்யவில்லை ஊராட்சி பகுதியில், கடந்த 4 ஆண்டுகளாக சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு, துப்புரவுப்பணி, தார் சாலை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடக்காமல் இருப்பதாகவும், பிரச்சினைகளை மனு மூலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றால் முறையான பதில் எதுவும் தராமல் சத்தம் போட்டு திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே தலைவர் செல்வி, கிராம சபை கூட்டத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து கிராம சபைக் கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர். இதனால் கவுண்டச்சிபுத்தூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.