நிரம்பும் உப்பாறு அணை: வெள்ள அபாய எச்சரிக்கை
உப்பாறு அணை நிரம்பி, தண்ணீர் வெளியேறும் வாய்ப்புள்ளதால், கரையோர மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாராபுரம் வட்டம், உப்பாறு அணை உதவி பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தாராபுரம் வட்டம், உப்பாறு அணையின் முழு கொள்ளளவான 24 அடியில் இன்று, முற்பகல், 6 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 21.30 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில், தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, அணை வேகமாக நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வேகமாக நீர் நிரம்பும் தருணத்தில், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படலாம். எனவே, உப்பாறு ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மக்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.