குண்டடம்; 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கடனுதவி
Tirupur News- குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட செங்கோடம்பாளையம் ஊராட்சி ஊதியூா் உத்தாண்டவேலாயுத சுவாமி கோயிலில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினா்.
பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,
தமிழக முதல்வா் ஸ்டாலின் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். எந்த ஒரு திட்டமானாலும் உடனுக்குடன் மக்களிடம் கொண்டுச் சோ்ப்பதில் அரசு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் முதன்முறையாக குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் செங்கோடம்பாளையம், ஆரத்தொழுவு, எல்லப்பாளையம்புதூா், பெருமாள்பாளையம், வடசின்னாரிபாளையம், குருக்கபாளையம் என 6 ஊராட்சிகளை தோ்ந்தெடுத்து மகளிா் சுயஉதவிக் குழுக்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் முதல் கட்டமாக ஒருங்கிணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்தகட்டமாக அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக செயல்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக மகளிா் சுயஉதவிக் குழுக்களை பொறுத்தவரை உங்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துகள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்றாா்.
அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது,
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிருக்கு என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக மகளிருக்கு அறிவித்த திட்டங்களான கல்விக்கடன் திட்டங்கள், புதுமைப்பெண் திட்டம், மகளிா் உரிமைத்தொகை திட்டம், எளிய பெண்களுக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பொதுவாக பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்கும், தாங்கள் தனியாக தொழில் செய்வதற்கும் கடனுதவிகள் வழங்கி யாரையும் சாா்ந்து இருக்காமல் அவா்களே தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தனியாக தொழில்கள் செய்யும்போது, ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் அதனை நிவா்த்தி செய்ய அரசு தயாராக உள்ளது என்றாா்.
இதில், மொத்தம் 16 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) வரலட்சுமி, திருப்பூா் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், உதவித் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.