வரி வசூல் பணி தீவிரம்: தேர்தலுக்குள் வசூலிக்க இலக்கு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், வரி வசூலை முடிக்க, உள்ளாட்சி நிர்வாகத்தினர் தயாராகி வருகின்றனர்.;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், வரி வசூலை முடிக்க, உள்ளாட்சி நிர்வாகத்தினர் தயாராகி வருகின்றனர். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் ஆண்டுதோறும், மார்ச் மாதத்துக்குள் பொதுமக்கள், வணிக நிறுவனத்தினரிடம் இருந்து தொழில் வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், உரிம கட்டணம் மற்றும் ஏல குத்தகை இனம் சார்ந்த கட்டணம் ஆகியவை வசூலிக்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்றுப்பரவல் ஊரடங்கால், தொழில்கள் முடங்கின. இதனால், வரி வசூலிப்பில் கண்டிப்பு காட்டப்படவில்லை
ஆனால், இம்முறை, 100 சதவீதம் வரி விதிப்பை உறுதி செய்ய வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவும், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், வரி வசூலை முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சி நிர்வாகத்தினர் சார்பில் வரி வசூல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.