வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி சூடம் ஏற்றி இந்து முன்னணியினர் போராட்டம்
வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி, தாராபுரத்தில் சூடம் ஏற்றி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை; கோவிலில் சிறப்பு பூஜைகள் மட்டும் நடக்கிறது.
தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படுவதால், வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும் எனக்கோரி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முருகன்கோவில், காடு அனுமந்தராய சுவாமி கோவில், ராமர்கோவில், பெருமாள் கோவில், சின்னியகவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கோனாபுரம் பெருமாள் கோவில் உள்பட 20 இடங்களில், கோவில் முன் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தின்போது, கோவில் முன் சூடம் ஏற்றப்பட்டது. போராட்டத்தில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன்,கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.