கோழி பண்ணையாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக்கோரிக்கை
தாராபுரத்தில் நடந்த கூட்டத்தில், கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனியார் மண்டபத்தில், தாராபுரம் வட்டார கறிக்கோழி பண்ணை வளர்ப்பு பண்ணையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநில பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோழி பண்ணையாளர்களுக்கு, அரசு இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது; நலவாரியம் அமைக்க பெயர் பட்டியல் தயாரித்து அரசிடம் சமர்ப்பிப்பது. கறிக்கோழி வளர்க்கும் பண்ணையாளர்களுக்கு கறிக்கோழிக்கு வளர்ப்பு கூலியாக கிலோவுக்கு 10 ரூபாய், நாட்டுக் கோழிக்கு 15 ரூபாய், கால்நடைகளுக்கு 5 ரூபாய் உயர்வாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தாராபுரம் வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.