திருப்பூர் மாவட்டத்தில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு பற்றிய கள ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு பற்றிய கள ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழக மின்சார வாரியம், மானியம் பெறும் இணைப்புகளை வரன்முறைப்படுத்தும் நோக்கில், மின்நுகர்வோரின் ஆதார் விவரம் இணைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக ஆதார் இணைப்பு பணி ஆன்லைன் வாயிலாக நடந்தது. உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. திருப்பூர் மாவட்டத்தில் ஆதார் இணைப்பு பணி மந்தமாக நடந்தது. அரசு அளித்த அவகாசத்துக்குள் ஆதார் இணைப்பு பணி 80 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்தது. இருப்பினும் ஒரே உரிமையாளர், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.
கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். மாறாக உரிமையாளர் ஆதார், அனைத்து இணைப்புகளிலும் இணைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளில், ஒரே குடும்ப உறுப்பினரின் ஆதார் இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. வீடு வீடாக சென்று வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் விவரம் இணைக்க அறிவுறுத்தப்பட்டது.அதற்கு பிறகும் இரட்டைப்பதிவு போன்ற ஒரே ஆதார் பதிவு விவரங்களை சேகரித்து மீண்டும் தற்போது பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், மின்வாரியத்தில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும் வாரிய அறிவிப்பை ஏற்று அனைவரும் ஆதார் இணைத்தனர். ஒரே உரிமையாளரின் பல கட்டடங்களுக்கு ஆதார் இணைப்பதில் சிக்கல் இருக்கிறது. வாடகை வீட்டில் குடியிருப்பவரின் ஆதார் இணைக்கப்பட வேண்டும். அதற்காக மீண்டும் வீடு வீடாக கள ஆய்வு நடத்தி வருகிறோம். எதிர்காலத்தில் மின் கட்டணம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்நுகர்வோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.