தாராபுரம்; மின் இணைப்பை துண்டிக்க வந்த மின்வாரிய அலுவலர்கள்; விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு
Tirupur News- தாராபுரத்தில், மின் இணைப்பை துண்டிக்க வந்த மின்வாரிய அலுவலர்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பெத்தம்பட்டி அருகே விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிஏபி., பாசன வாய்க்கால் அமைக்க நிலம் கொடுத்துள்ளனர்.
நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களது நிலங்கள் மூலம் மின் இணைப்பு பெற்று பயன் பெற்று வந்தனர். இந்நிலையில் பாசன வாய்க்கால் அருகே மின் இணைப்பு வழங்கக் கூடாது என தமிழ்நாடு மின் வாரியத்தின் சார்பில் சட்டம் உள்ளதாகவும் இது சம்பந்தமாக விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கின் உத்தரவின் பேரில் விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் வருவாய் துறையினர் மற்றும் மின்சார வாரியத்தினர் அப்பகுதியில் சுமார் 12க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களில் இருந்த மின் இணைப்புகளை துண்டித்து விட்டதாக கூறி அப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து மின் இணைப்பை துண்டிக்க வந்திருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் விவசாயிகள் நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவின் நகலை காண்பித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஆடு மாடு கோழிகள் உடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேற போவதாக அறிவித்த நிலையில் தாராபுரம் வட்டாட்சியர் மற்றும் மின்வாரியத்தினர் திங்கட்கிழமை (இன்று) கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு அதன் பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், நாளை(இன்று) பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாதவிட்டால் ஆடு, மாடுகளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.