பொங்கல் கருணை தொகை ரூ. 10,000 கிடைக்குமா?
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் கருணைத் தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவி பொறியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அரங்கில் நடந்த கூட்டத்துக்கு, அதன் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தகுமார் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக அரசில் பணிபுரியும் 'டி பிரிவு' பணியாளர்கள் அனைவருக்கும் பொங்கல் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதியக்குழு நிலுவை தொகையை, 21 மாதம் கணக்கிட்டு வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள டி பிரிவு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.