திருமணமான 10 மாதத்தில் பட்டதாரி பெண் சாவு: தந்தை போலீஸில் புகார்..!
மூலனூர் அருகே திருமணமான 10 மாதத்தில் பட்டதாரி பெண் இறந்தார். சாவில் சந்தேகம் என தந்தை போலீஸில் புகார் செய்து உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் மார்க்கம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் திருமான்,45. இவரது மகள் நித்யா,21, பிஎஸ்சி.படித்துள்ளார். இவருக்கும், மூலனூரை காதல்கோட்டை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் நவீன்குமார்,29, க்கும், கடந்த பத்து மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நவீன்குமார், கட்டிட வேலை செய்கிறார்.
மேலும், எட்டாம் வகுப்பு மட்டும் படித்து உள்ளார். காதல்கோட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர், இன்று காலை நவீன்குமார் வேலைக்கு சென்று விட்டு, சாப்பிட வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் விட்டத்தில் நித்யா தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீன்குமார் சத்தம்போட்டார். அருகில் இருந்தவர்கள் நித்யாவை மீட்டு மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நித்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மூலனூர் போலீஸில் திருமான் புகார் செய்தார். புகாரின் பேரில் தாராபுரம் டிஎஸ்பி.,ஜெயராமன் உத்தரவுப்படி, மூலனூர் இன்ஸ்பெக்டர் திருவானந்தம், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருமணமாகி10, மாதங்களே ஆவதால் ஆர்டிஓ., விசாரணையும் நடக்கிறது.