கொப்பரை உற்பத்தி மந்தம் :உலர்களங்கள் வெறிச்சோடின
தொடர் மழையால் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம், மணக்கடவு, தேர்பாதை, பழனி சாலை பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் களங்கள் உள்ளன. இந்த உலர்களங்களில், தேங்காய் உடைக்கப்பட்டு கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொப்பரை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.
இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
தாராபுரம் தாலுகாவில் உள்ள உலர்களங்களுக்கு, தினமும் 30 லோடு தேங்காய் கொண்டு வரப்பட்டு, கொப்பரை உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். தற்போது, வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கொப்பரை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்ட கொப்பரை, தார்பாலின் மூலம் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பிழந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.