கட்டணக் கொள்ளை: வியாபாரிகள் அதிருப்தி
தாராபுரம் பஸ் ஸ்டாண்டில், கட்டணக் கொள்ளை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.;
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நகராட்சி பஸ் நிலையம் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன. பஸ் நிலையத்தில் வெள்ளரிக்காய், இஞ்சி முரப்பா, பூ, முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை விற்கும் வியாபாரிகள் அதிகம். அவர்களிடம் இருந்து சுங்க கட்டணமாக, 50 ரூபாய்க்கு ரசீது கொடுத்து வசூலிக்கப்படுகிறது.
அவர்களிடம் மட்டுமன்றி, பஸ் நிலையத்திற்கு வெளியில் உள்ள கடைவீதி உட்பட பல்வேறு பகுதிகளில் பானிபூரி, பஜ்ஜி, போண்டா, மீன் விற்பனை செய்து வரும் கடைகாரர்களிடமும் அதே ரசீதை பயன்படுத்தி கட்டணம் வசூல் செய்கின்றனர் என்ற புகார் உள்ளது. சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.