இழப்பீடு வழங்காததால் தாராபுரத்தில் அரசு பஸ் ஜப்தி
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், விபத்து இழப்பீடு வழங்காததால், அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.;
திருப்பூா் மணியகாரம் பாளையத்தை அடுத்துள்ள வள்ளியம்மை நகா் பகுதியை சோ்ந்தவா் சின்னதுரை மகன் ரவிக்குமார் (வயது38). திருமணம் ஆகாதவா். இவா் கடந்த 2015-ம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் இருந்து, திருப்பூருக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்தார்.
தாராபுரம் அருகே, ஈரோடு ரோடு பிரிவு பகுதியில் அவா் சென்று கொண்டிருந்த போது, திருப்பூரில் இருந்து திண்டுக்கலுக்கு சென்ற அரசு பஸ், அவரது டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் பலியானார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இழப்பீடு கேட்டு, ரவிக்குமாரின் குடும்பத்தினர், தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில் ரவிக்குமார் குடும்பத்துக்கு ரூ.9 லட்சத்து 57 ஆயிரத்து 457 வழங்கவேண்டும் என, 2018-ம் ஆண்டு தீா்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நஷ்டஈடு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்காமல் தாமதம் செய்து வந்தது.
இதையடுத்து, நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில், கோர்ட் பணியாளா்கள் தாராபுரம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டு இருந்த திருப்பூா்-போடி அரசு பஸ்சை, நேற்று ஜப்தி செய்தனா். அதில் இருந்த பயணிகளை இறங்க செய்து வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.