அவினாசியில் 'பிள்ளையார் சுழி' போட்டாரா அண்ணாமலை!
அவினாசி பேரூராட்சியில், 18 வார்டுகளிலும் வேட்பாளர்களை, பாஜகவினர் களம் இறக்குகின்றனர்.
கடந்த, 2020, அக்.,30. திருப்பூர் மாவட்டம், அவினாசியில் நடந்த அக்கட்சியின் நகர அலுவலக திறப்பு விழாவுக்கு வந்தார், அப்போதைய பா.ஜ., துணைத்தலைவர் அண்ணாமலை. சட்டமன்ற தேர்தல் களத்துக்கு, அரசியல் கட்சிகள் அதிவேகமாக தயாராகிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அவினாசியில், வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை பேசினார்.
''அவினாசிக்கு, வாசியில் காசி என்ற பெயர் உண்டு. புண்ணிய தலமான காசியில் பிறப்பதால் கிடைக்கும் புண்ணியம், அவினாசியில் பிறப்பதாலும் கிடைக்கும் என்பதே அதன் அர்த்தம். அந்த வகையில், காசியில் இருந்து எம்.பி.,யாகி, இன்று பிரதமரமாக மோடி உயர்ந்துள்ளார். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், அவினாசியில் இருந்து பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்ல வேண்டும். அவரது வெற்றிக்காக உழைக்க வேண்டும். அவினாசி தனி தொகுதி தான். தகுதியான வேட்பாளர்கள் நம்மிடம் உள்ளனர்'' இப்படி முழங்கினார் அண்ணாமலை.
அதுவும், அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் போதே, அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையில் நின்றபடி அவர் பேசியது தான், பலருக்கும் ஆச்சர்யம்.
'ஏதோ அரசியலுக்காக பேசிவிட்டு சென்றுவிட்டார்' என, மற்ற கட்சியினர் நினைத்தனர். ஆனால், சட்டசபை தேர்தலில், அக்கட்சியின் மாநில தலைவராக இருந்த முருகன், அவினாசி தொகுதியில் களம் இறங்கப்போவதாக தகவல் பரவியது. அதற்கான ஆயத்தப்பணிகளில் பா.ஜ.,வினர் வேகம் காட்டினர். அவினாசியில், முருகன் தங்குவதற்கு, வீடு தேடும் படலத்தையும் ஆரம்பித்தனர்.
அதே நேரம், அதிர்ந்து போயினர் அ.தி.மு.க.,வினர். 'எக்காரணம் கொண்டும் கோட்டையை விட்டுக் கொடுக்க முடியாது' என, கட்சித்தலைமைக்கு நெருக்கடி கொடுத்தனர். அதன் விளைவு, முருகன், தாராபுரம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். பிரதமர் முதற்கொண்டு கட்சியின் முக்கிய வி.ஐ.பி.,க்கள் தாராபுரத்தில் பிரசாரம் செய்தனர். ஆனால், சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் முருகன் தோற்றார். அதற்கு பலனாக, மத்திய அமைச்சர் பதவியை வழங்கினார் பிரதமர் மோடி. அண்ணாமலை, மாநில தலைவராக உயர்ந்தார்.
'இப்படியாக, கட்சியின் கவனிக்கதக்க வளர்ச்சிக்கு, அவினாசியில் அண்ணமலை பேசிய பேச்சு, பிள்ளையார் சுழியாக இருந்தது' என்கின்றன பா.ஜ., வட்டாரங்கள். கூட்டணி படகில் சவாரி செய்து வந்த நிலையில், அ.தி.மு.க.,வின் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறது பா.ஜ.,கட்சி. 'இனி, என்ன செய்ய போகிறது பா.ஜ.,?' இந்த கேள்வி எழ, ''பல இடங்களில் தனித்து களம் காண்கிறது. அவினாசி பேரூராட்சியில், 18 வார்டுகளிலும் வேட்பாளர்களை, அக்கட்சியினர் களம் இறக்குகின்றனர். அவர்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள்? அவர்கள் பிரிக்கும் ஓட்டு யாருக்கு பாதகம், யாருக்கு சாதகம்? என கணக்கு போட துவங்கிவிட்டன, மாற்று கட்சிகள்.