பெண் டாக்டர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு; வேலைக்கார பெண்மணி கைது
தாராபுரத்தில், பெண் டாக்டர் வீட்டில் 9 பவுன் நகைகளை திருடிய வேலைக்கார பெண்மணியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அருகே அரசு டாக்டர் வீட்டில் 9 பவுன் நகைகளை நூதன முறையில் திருடி சென்ற வேலைக்கார மூதாட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த பொன் கார்த்திகேயன் மனைவி வித்யா. இவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டு வேலைக்கு தாராபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவரது மனைவி கஸ்தூரி (வயது58) என்பரை வீட்டு வேலைக்கு அமர்த்தினார். இவர் தினசரி டாக்டர் வீட்டிற்கு சமையல் செய்வது மற்றும் துணிகளை துவைப்பது, வீட்டை பெருக்குவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்.
தெரிந்த பெண்மணி என்ற நம்பிக்கையில், வீட்டை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கஸ்தூரி, டாக்டர் வீட்டில் இருந்து சிறிது சிறிதாக நகைகளை திருடி சென்றுள்ளார். இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த வித்யா 9 பவுன் நகைகள் காணாமல் போனது குறித்து, கஸ்தூரியிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதுகுறித்து டாக்டர் வித்யா, தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் பெண் போலீசார் கஸ்தூரியை அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது டாக்டர் வீட்டில் திருடப்பட்ட 9 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளதாக கூறி திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார், கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து நகையை பறிமுதல் செய்த பிறகு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.