பஸ்சில் பயணித்த மூதாட்டியின் 14 பவுன் நகை மாயம்
தாராபுரத்தில், பஸ்சில் சென்ற மூதாட்டியின் 14 பவுன் நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.;
பஸ்சில் சென்ற மூதாட்டியின் நகைகளை திருடிய, மர்ம நபர்கள்.
தாராபுரத்தை அடுத்த எல்லப்பன்நாயக்கன் வலசை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவருடைய மனைவி மனோன்மணி (வயது 60). இருவரும் நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரத்தில், உறவினர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். பின் அங்கிருந்து மதியம் ஈரோடு செல்லும் அரசு பஸ்சில் ஏறி, தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கினர்.
மனோன்மணி தனது கைப்பையில் 14 பவுன் நகையை வைத்திருந்தார். பின்னர் இருவரும், தாராபுரத்தில் இருந்து மதுக்கம்பாளையம் செல்லும் பஸ்சில், எல்லப்ப நாய்க்கன் வலசு செல்ல ஏறினார்கள். அந்த பஸ் எல்லப்ப நாய்க்கன் வலசு வந்ததும், இருவரும் இறங்கினர். அப்போது மனோன்மணி, தனது கைப்பைக்குள் வைத்திருந்த மற்றொரு சிறிய பை (மணிபர்ஸ்) இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். அந்த பையில் 14 பவுன் நகை இருந்தது.
பயணிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், மனோன்மணி நகை வைத்திருந்த பர்சை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.