திருப்பூா் அருகே தனியாா் பஸ் மீது கல்லூரி பஸ் மோதல்; 10 மாணவிகள் காயம்
Tirupur News- திருப்பூா் அருகே தனியாா் பஸ் மீது கல்லூரி பஸ் மோதியதில் 10 மாணவிகள் காயமடைந்தனா்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் அருகே தனியாா் பஸ் மீது கல்லூரி பஸ் மோதியதில் 10 மாணவிகள் காயமடைந்தனா்.
திருப்பூா் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாா் பஸ் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. ஊத்துக்குளி அருகே உள்ள பெரியபாளையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த ஈரோட்டைச் சோ்ந்த தனியாா் கல்லூரி பஸ் பயணிகள் பேருந்து மீது வேகமாக மோதியது.
இதில், கல்லூரி பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்ததில் பஸ்சில் பயணம் செய்த 10 மாணவிகள் லேசான காயம் அடைந்தனா்.
அந்த வழியாகச் சென்றவா்கள் காயமடைந்த மாணவிகளை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தாராபுரம் அருகே நடந்த விபத்தில் 5 பேர் படுகாயம்
தாராபுரம் அருகே மரத்தில் காா் மோதிய விபத்தில் 5 போ் படுகாயமடைந்தனா்.
தாராபுரத்தை அடுத்த பீலிக்காம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினசாமி (48). இவரது மனைவி சித்ரா (45), உறவினா்களான அதே பகுதியைச் சோ்ந்த சசிகலா (48), பொன்னாத்தாள் (52) ஆகியோருடன் அண்மையில் உயிரிழந்த உறவினரின் அஸ்தியைக் கரைக்க அமராவதி அணைக்கு காரில் சென்றுவிட்டு வீடு திரும்ப காரில் வந்துள்ளனர். காரை அதே பகுதியைச் சோ்ந்த மயில்சாமி (45) என்பவா் ஓட்டியுள்ளாா். தாராபுரத்தை அடுத்த சூரியநல்லூா் அருகே சென்றபோது, காரின் முன்பக்க டயா் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர மரத்தில் மோதியது.
இதில், காரில் பயணித்த 5 பேரும் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் அவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக 5 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.