மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம், இனி வீடுகளுக்கே தேடி வரும் என கலெக்டர் தகவல்
Tirupur News,Tirupur News Today- மகளிர் உரிமைத்தொகை பெற, விண்ணப்பங்கள் வீடுகள் தோறும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 8 லட்சத்து 18 ஆயிரத்து 344 குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. இரண்டு கட்டங்களாக விண்ணப்பபதிவு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
தமிழக அரசு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்ட செயல்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 8, 18, 344 கார்டுதாரர்கள் 1135 ரேஷன் கடைகள் உள்ள நிலையில் 1113 விண்ணப்ப பதிவு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையிலும் , இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளது. அனைத்து முகாம்களும் பொது மக்களின் வசதிக்காக ரேஷன் கடைகளுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள் அல்லது அரசு கட்டிடங்களில் நடக்க உள்ளது.
முகாம் நடைபெறும் நாள், நேரம் , இடம் குறித்து டோக்கன் நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் நாளை முதல் பொது மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில், 225 ஊராட்சிகள் 13 ஊராட்சி ஒன்றியங்கள், 30 மாநகராட்சி வார்டுகளில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும். மீதமுள்ள இடங்களில் இரண்டாம் கட்ட விண்ணப்பம் பதிவுமுகாம் நடைபெறும். விண்ணப்ப பதிவு முகாம்களில் ரேஷன் கடை பணியாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினை சேர்ந்தவர்கள் என 7082 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பெற, திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நேரில் வரவேண்டியது இல்லை. வீடுகளுக்கே, விண்ணப்பங்கள் தேடி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.