நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருப்பூருக்கு வருகை தந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Update: 2021-11-22 03:00 GMT

முதல்வர் மு.க. ஸ்டாலின் 

கோவையில் இருந்து இன்று மதியம் 2.20 மணிக்கு திருப்பூருக்கு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், இன்று மாலை நடைபெறும் நிகழ்வில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இவ்விழாவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக, 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 1339 பேருக்கு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நிதியுதவி உள்ளிட்டவற்றை, மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.

பின்னர், தெற்கு அவினாசிபாளையம், கே.அய்யம்பாளையம், சின்னேகவுண்டன்பாளையம் துணைமின்நிலையம், புதுராமகிருஷ்ணாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தாராபுரம் கால்நடை மருத்துவமனை பள்ளிக்கட்டிடங்கள் உள்பட ரூ.28 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.

அதேபோல், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களை சந்தித்து பேசுகிறார். அதை தொடர்ந்து இன்று மாலையே, கோவை சென்று சுற்றுலா மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் தங்குகிறார். இதையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News