திருப்பூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மைப் பணி தீவிரம்
Tirupur News,Tirupur News Today- கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. இதையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் கடந்த 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, 12ம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் நாளையும் (திங்கட்கிழமை), தொடக்கப்பள்ளிகள் வருகிற 14-ம் தேதி, புதன்கிழமையும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப்பணி மும்முரமாக நடந்து வருகிறது. பள்ளிகளின் வகுப்பறைகள் சுத்தம் செய்தல், மேஜை, இருக்கைகள் சுத்தம் செய்தல், கழிப்பிடங்கள், சுற்றுப்புற வளாகம், விளையாட்டு மைதானம் தூய்மைப்பணி, கரும்பலகைகளுக்கு வர்ணம் பூசுதல், மின்இணைப்பு சரி செய்தல், குடிநீர் தொட்டிகள் தூய்மை செய்தல், கதவு-ஜன்னல்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
சூடுபிடித்த விற்பனை
பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையொட்டி, கடந்த சில தினங்களாக பள்ளி சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள், எழுதும் உபகரணங்கள், ஸ்கூல் பேக், காலணிகள் மற்றும் ஷூக்கள் வாங்குவதில் பெற்றோர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்றும் திருப்பூரில் உள்ள பிரதான கடை வீதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் வந்து இத்தகைய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நோட்டுப்புத்தகங்கள், ரெடிமேடு சீருடைகள், ஸ்கூல் பேக், ஷூக்கள் விலை 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக, பெற்றோர்கள் சிலர் தெரிவித்தனர்.
பள்ளி சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை
மேலும் பி.என் ரோடு, அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பள்ளி மாணவ மாணவியர் புத்தக சுமைகளுடன், நெரிசலில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே, காலை மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு பஸ்களை இயக்க, தமிழக அரசும் , அரசு பஸ் போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பெற்றோரிடையே எழுந்துள்ளது.