சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், புதிதாக எம்.பி.ஏ. பாடப்பிரிவு விரைவில் துவக்கம்
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், புதிதாக எம்.பி.ஏ. பாடப்பிரிவு வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன, கடந்த 1966ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த கல்லூரி, 57 ஆண்டுகளை கடந்து, இன்னும் மூன்று ஆண்டுகளில், வைரவிழா காண இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் இக்கல்லூரி லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிய முக்கிய அரசு கலைக்கல்லூரியாகும். இங்கு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான தங்கும் விடுதிகளும் இருப்பதால் பிற மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இங்கு படித்து பட்டம் பெற்று வருகின்றனர். தற்போது, இக்கல்லூரியில் எம்பிஏ வகுப்புகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி 17 இளநிலை மற்றும் 11 முதுநிலை வகுப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023-24 வது கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ. பாடப்பிரிவைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அங்கீகாரம் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. எம்.பி.ஏ. பட்ட வகுப்பில் சோ்வதற்கு டான்செட் எழுதிய மாணவா்கள், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொது கலந்தாய்வில் பங்கேற்று, கல்லூரியின் குறியீட்டு எண் 330-ஐ தோ்வு செய்ய வேண்டும்.
தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணத் தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், பொது பிரிவினருக்கான கல்லூரி விருப்பத் தோ்வு மற்றும் கலந்தாய்வு இணைய வழியில் இன்று முதல் நடைபெறுகிறது. இதுகுறித்த விவரங்களை இணையதளம் https://cgac.in/ மூலமாக மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.