திருப்பூர்; எண்ணெய் வித்து பயிரிட மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், எண்ணெய் வித்து பயிரிட மானியம் வழங்கப்படுவதால் அதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
Tirupur News- எண்ணெய் வித்து பயிர்கள் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் எண்ணெய் வித்துக்கு வழங்கப்படும் மானியத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, வேளாண் துறை அதிகாரி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக, நெல், 10 ஆயிரம் எக்டர்; சிறு தானியங்கள், 60 ஆயிரம் எக்டர்; பயறு வகை, 20 ஆயிரம் எக்டர் மற்றும் நிலக்கடலை, 10 ஆயிரம் எக்டர் சாகுபடி செய்யப்படுகிறது.
அவிநாசி, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி வட்டாரங்களில், மானாவாரி பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலை பயிரில் மகசூலை அதிகரித்து, உற்பத்தி பெருக்க, வேளாண் துறையினர், விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, அதிக மகசூல் தரக்கூடிய டி.எம்.வி.,- 14 ரக விதைப் பண்ணைகள், திருப்பூர் வட்டாரம், தொரவலுார் பகுதியில், குமாரசாமி என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் செயல்பாடுகளை பார்வையிட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது;
மாவட்டத்தில், எண்ணெய் வித்து பயிர்கள் திட்டத்தின் கீழ், புதிய ரகங்கள் உற்பத்தி மற்றும் வினியோகம், உயிர் உரம், நுண்ணுாட்டச்சத்து, செயல் விளக்கத்திடல்கள், ஜிப்சம், உயிரியல் காரணிகள், ஊடுபயிர், அறுவடை பின்செய் நேர்த்தி ஆகிய இனங்களில், மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
டி.எம்.வி., - 14 ரக நிலக்கடலை செடி, மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்ற, அதிக காய் பிடிப்பு மற்றும் நல்ல மகசூல் தரக்கூடிய ரகமாகும். மானாவாரியில், ஏக்கருக்கு, 850 கிலோ, இறவைக்கு, 910 கிலோ மகசூல் தரக்கூடியது.
இவ்வாறு, அவர் கூறினார். திருப்பூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் உடனிருந்தார்.