நம்மாழ்வார் விருது பெற, விவசாயிகளுக்கு அழைப்பு

Tirupur News-விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-09-27 10:51 GMT

Tirupur News- தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற, விவசாயிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. (கோப்பு படங்கள்)

Tirupur News,Tirupur News Today- அங்கக வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பதே ஆகும்.

அங்கக வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்க செய்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன. நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

வேளாண்மைத்துறை மூலம் நடப்பாண்டில், அங்கக வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைதளத்தில், நவம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் https://www.tnagrisnet.tn.gov.in பதிவுக்கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

பங்கேற்பதற்கான தகுதிகள்:

குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். முழுநேர அங்கக விவசாயியாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மதிப்பீட்டுக்குழு

மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக்குழு மற்றும் மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். பரிசுத் தொகை:-வெற்றி பெறும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில்ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் தமிழ்நாடு முதலமைச்சரால் குடியரசுதினத்தன்று வழங்கப்படும்.

முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10,000மதிப்புடைய பதக்கம், இரண்டாம்பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7,000மதிப்புடைய பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5,000 மதிப்புடைய பதக்கம். மேலும், நம்மாழ்வார் விருதுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News