திருப்பூர் மாவட்டத்தில், ராபி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், ராபி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என விவசாயிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ராபி செயல்படுத்த காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.ராபி பருவத்தில் நெல்-2, மக்காசோளம்-3, கொண்டைக்கடலை, நிலக்கடலை மற்றும் சோளம் போன்ற அறிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ராபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தாங்கள் பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் முன் இத்திட்டத்தின் மூலம் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம்.
பயிர் காப்பீடு பீரிமியம் தொகையாக நவம்பர் 15-ம் தேதிக்குள் ஏக்கருக்கு நெற்பயிருக்கு ரூ.562.5 தொகையும், நவம்பர் 30-ம் தேதிக்குள் மக்காச்சோளத்துக்கு ரூ.535.43 தொகையும், கொண்டக்கடலைக்கு ரூ.210 தொகையும், டிசம்பர் 15-ம் தேதிக்குள் சோளத்துக்கு ரூ.46.30 தொகையும், டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலக்கடலைக்கு ரூ.472.50 தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
எனவே விவசாயிகள் இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்புகளிலிருந்து பாதுகாத்திட தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை அரசு நிர்ணயித்த தேதிக்கு முன்னரே காப்பீடு செய்து பயன் அடையலாம்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.